முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொழில் பயிற்சிகளுக்கு ஆர்வம் காட்டாத வடக்கு மாணவர்கள்

கல்வி கற்பவர்கள் அனைவரும் பல்கலைக்கழகம் சென்று விடுவதில்லை. ஒவ்வொரு
வருடமும் பாடசாலை கல்வி முடிந்து வெளியேறுபவர்களில் 10 வீதமானவர்கள்
பல்கலைக்கழக அனுமதிக்கும், கல்வியற் கல்லுரிக்கும் தகுதி பெற ஏனையவர்கள்
நட்டாற்றில் விடப்படுகின்றனர்.

அத்துடன் கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையின்
பின்னர் கூட பலர் தமது கல்வியைத் தொடர முடியாதவர்களாக இடைவிலகுகின்றார்கள்.
இவ்வாறானதொரு நிலமை நாடு பூராகவும் உள்ள போதும், வடக்கில் கொஞ்சம் அதிகம்
என்றே சொல்ல வேண்டும்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட யுத்த அழிவு
காரணமாக மக்கள் மத்தியில் உள்ள வறுமை மற்றும் அதன் வடுக்களில் இருந்து அந்த
பகுதிகள் முழுமையாக மீளாமையாலும் மற்றும் யுத்தம் காரணமாக வடக்கில் இருந்த
பேராசிரியர்கள் பலரும் சிறந்த ஆசிரியர்களும் புலம்பெயர்ந்த காரணத்தினாலும்
கல்வித் துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

பாடசாலை கல்வி

இதன் காரணமாக உயர்தரம்
மற்றும் சாதாரண தரப்பரீட்சைக்கு பின்னர் வெளியேறுபவர்களுடன் பாடசாலை கல்வியை
முறித்து இடை விலகுபவர்கள் தொகையும் இங்கு அதிகரித்து வருகின்றது.

வடக்கின்
முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளில் இந்த நிலை
அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

இவ்வாறு இடைவிலகும் மாணவர்கள் மற்றும் பாடசாலை படிப்பை முடித்து வெளியேறிய
மாணவர்கள் எனப் பலரும் அடுத்த கட்டங்களில் தொழிற்படையாக மாற்றமடைகின்றார்கள்.

தொழில் பயிற்சிகளுக்கு ஆர்வம் காட்டாத வடக்கு மாணவர்கள் | Northern Students Not Interested In Vta

ஒரு தொகுதியினர் தனியார் நிறுவனங்களில் வங்கியல், கணினி சார்ந்த
கற்கைகளை தொடர்கிறார்கள். இன்னும் சிலர் எந்தவொரு கற்கைகளையும் பூர்த்தி
செய்யாது கூலிவேலை, மேசன் வேலை, தச்சு வேலை, கடைகளில் வேலை செய்தல் என சாதாரண
வேலைகளில் தம்மை இணைத்துக் கொள்கிறார்கள்.

இங்கு ஒருவருக்கு கீழ் சென்று
கூலியாளாக குறைந்த சம்பளத்துடன் வேலை பழகுகிறார்கள். இவ்வாறானவர்களில் பலர்
காலம் முழுவதும் வெறும் கூலியாளாகவே இருந்து விடுகிறார்கள. அந்தவகையில் இங்கு
அவர்களும் அந்த வேலையை முழுமையாக செய்யக் கூடிய முறையான பயிற்சி என்பது
கிடைப்பதில்லை.

வடக்கைப் பொறுத்தவரை வேலையில்லாப் பிரச்சினை என்பது அதிகமாக இருக்கின்ற போதும்
சில துறைகளில் வேலை செய்வதற்கு தேர்ச்சி பெற்ற தொழில்படை ஒன்றை பெற்றுக் கொள்ள
முடியாத நிலை காணப்படுகின்றது.

வடமாகாணத்தில் முதலீடுகளை அதிகரித்து
கைத்தொழில் துறைகளை விருத்தி செய்கின்ற போது அதற்கு தேவையான தொழிற்படைகளை
பெறுவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. இதன்போது தென்பகுதியில் இருந்து
விண்ணப்பிப்பவர்களுடன் போட்டிபோடக் கூடிய நிலையில் வடக்கில் தொழில்
நிபுணத்துவம் பெற்றவர்கள் தொகை மிகக் குறைவாகவே உள்ளது.

அதற்கு காரணம்
வடக்கில் தொழில் சார் பயிற்சிகளுடன் கூடிய கற்கை நெறிகளை பூர்த்தி செய்யாமை
என்பதை மறுத்து விட முடியாது. குறிப்பாக நாடு பூராகவும் தொழில்சார்
பயற்சிகளையும், அது சார்ந்த கற்கைளையும் வழங்கும் தொழில் நுட்ப கல்லூரிகள்,
நைட்டா, தொழிற் பயிற்சி நிலையங்கள், இளைஞர் வலிவூட்டல் நிலையங்கள், தேசிய
இளைஞர் சேவைகள் மன்றம், விதாக என பல்வேறு அமைப்புக்களும், திணைக்களங்களும்
அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

தொழிற் பயிற்சி

அதேபோல் தனியார் மற்றும்
வெளிநாட்டு நிறுவனங்கள் சிலவற்றுடன் இணைந்தும் அரசாங்கம் இத்தகைய
பயிற்சிகளுக்கு ஊக்குவிப்பு வழங்குகின்றது. குறிப்பாக ஜேர்மன் அரசாங்கத்துடன்
இணைந்து கிளிநொச்சியில் இத்தகைய பயிற்சி மையம் ஒன்றை நிறுவியும் உள்ளது.
இவ்வாறு தொழில் பயிற்சிகளுக்கு ஏற்ற மையங்கள் பல இருந்தும் அதில் இணைந்து
பயிற்சி பெறுபவர் தொகை என்பது வடக்கில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது.

தொழில் பயிற்சிகளுக்கு ஆர்வம் காட்டாத வடக்கு மாணவர்கள் | Northern Students Not Interested In Vta

குழாய் பொருத்துதல், வயறிங், மேசன் வேலை, தச்சு வேலை, வெல்டிங், பிறிண்டிங்,
மோட்டர் மெக்கானிக் உள்ளிட்ட பல தொழிற் பயிற்சிகளும், சுயதொழிலில் ஈடுபடக்
கூடிய யோக்கற் தயாரித்தல், ஊதுபத்தி தயாரித்தல், மெழுகுதிரி தயாரித்தல்,
மட்பாண்ட உற்பத்தி, கயிறு திரித்தல், நெசவு என கைவினைப் பொருட்களை வடிவமைத்தல்
என பல பயிற்சிகள் இவற்றின் ஊடாக வழங்கப்படுகின்றன.

ஆனால் பாடசாலை கல்வி
முடித்த மற்றும் இடைவிலகிய பலரும் இவ்வாறான வேலைகளை தமக்கு தெரிந்தவர்களுடன்
இணைந்து அவர்களின் கீழ் பயிற்சி பெற்று செய்கின்றனர். இதனால் இத் தொழில்
தொடர்பான சான்றிதழ்களோ, தொழில் நிபுணத்துவமோ அவர்களிடம் ஏற்படுவதில்லை.

இதனால்
பாரிய நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் இவ்வாறான வேலைகளுக்கு விண்ணப்பங்களைக்
கோருகின்ற போதும், மத்திய கிழக்கு நாடுகளும் இவ்வாறான வேலைகளுக்கு
விண்ணப்பங்களைக் கோருக்கின்ற போதும் விண்ணப்பிக்க முடியாத நிலையை
ஏற்படுத்துகிறது.

தென்பகுதியுடன் ஒப்பிடுகின்ற போது வடக்கு பகுதியில் இந்த
தொழில்சார் போட்டியில் இளைஞர், யுவதிகள் அதிகமாக தோற்று விடுகிறார்கள்.

கைவினைப் பொருட்களை பார்க்கின்ற போது கூட தெற்கில் இருந்து வருகின்ற கைவினைப்
பொருளுடன் ஒப்பிடுகின்ற போது வடக்கின் கைவினைப்பொருட்கள் தராதரம்,
தொழில்நுட்பம் என பல்வேறு விடயங்களில் பின்னுக்கு நிற்பதை ஏற்றுத்தான்
ஆகவேண்டும்.

பரம்பரை பரம்பரையாக செய்யப்பட்டும் வரும் கைவினைப் பொருட்கள்,
தாம் அறிந்ததைக் கொண்டு செய்தல் என்பன வடக்கில் உள்ளது. ஆனால்
தெற்கைப்பொறுத்தவரை அந்த கைவினைப் பொருள் உற்பத்தி தொடர்பில் பயிற்சி பெற்று
அதற்கான நிபுணத்துவ சான்றிதழ்களுடன் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் அதிகம் என்றே
கூற வேண்டும்.

வடக்கில் தொழில்சார் கற்கைகள் நடக்கின்ற போதும் அதில் பயிற்சி
பெறும் மற்றும் கற்கும் மாணவர் தொகை குறைவாகவே இருக்கிறது. அதற்கான காரணங்கள்
ஆராயப்பட வேண்டியதே.

உயர்தரம் மற்றும் சாதாரணதரம் பரீட்சைகள் முடிவடைந்ததும் பெறுபேறு வரும்
வரையில் உள்ள 3 மாத கால இடைவெளியிலும், சாதாரண தரப்பேறு வந்ததும் உயர்தரம்
கற்பதற்காக காத்திருக்க வேண்டிய 5 மாதத்திலும், உயர்தரப் பெறுபேறு வந்ததும்
பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய 6 மாதம் முதல் ஒரு வருட
இடைவெளியிலும் மாணவர்கள் குறுகிய கால தொழிற் பயிற்சிகளை மேற்கொள்வதில்லை.
அதற்கான வாய்ப்புக்கள் இலகுபடுத்தப்பட்டதாக இருப்பதாகவும் தெரியவில்லை.

மாறாக
ஆங்கிலம், கம்பியூட்டர் போன்ற கற்கைளில் மட்டுமே ஈடுபடுகின்றனர். மாணவர்கள்
தமது கல்வியை முடித்த பின் கூட தொழிற் பயிற்சிகளை கற்க ஆர்வம் காட்டுவது
வடக்கில் குறைவாகவே உள்ளது. மாணவர்களுக்கும், இளைஞர், யுவதிகளுக்கும் இது
தொடர்பான போதிய விழிப்புணர்வும், அறிவின்மையும் காணப்படுகின்றது. பாடசாலைகளில்
மாணவர்களுக்கு தொழிற்கற்கைகள், தொழில் பயிற்சிகள் தொடர்பில்
விழிப்பூட்டப்படுவதாக தெரியவில்லை.

அரசாங்கத்திடம் கோரிக்கை

ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தொழிற்
பயிற்சிகளை வழங்கும் மற்றும் அதனை நெறிப்படுத்துவதற்கான உத்தியோகத்தர்கள் பலர்
இருக்கின்றார்கள். ஆனால் அவர்களால் கூட போதியளவு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்படுவதாக தெரியவில்லை.

தொழில் பயிற்சிகளுக்கு ஆர்வம் காட்டாத வடக்கு மாணவர்கள் | Northern Students Not Interested In Vta

இவையெல்லாவற்றையும் தாண்டி யாழ்பாணத்தில் உள்ள தொழில் நுட்ப கல்லூரியில் சில
புதிய பயிற்சி நெறிகளுக்கு 1500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணபிக்கின்ற போதும்
ஆசிரியர் வளம், இடப்பற்றாக்குறை என்பவற்றைக் கருத்தில் கொண்டு வெறும் 300 பேர்
மாத்திரமே அப் பயிற்சி நெறிகளுக்குள் உள்வாங்கப்படுகின்றனர். ஏனையவர்கள்
இதன்போது ஏமாற்றமடைகிறார்கள்.

இந்தநிலையில், விண்ணப்பிக்கும் மாணவர்களை
முழுமையாக உள்வாங்கக் கூடிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய முன்வரவேண்டும்.
வடக்கில் உள்ள தொழிற் பயிற்சி மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகளை மேலும்
விரிவுபடுத்தப்பட வேண்டும்.

தொழில் பயிற்சிகளை முறையாக ஒழுங்கமைப்புடன் மேற்கொள்கின்ற போது வடக்கில்
சுயதொழில் முயற்சியாளர்களை அதிகமாக உருவாக்க முடியும்.

அதற்கான நிதி உதவிகளை
வழங்குவதற்கு மாகாணசபை மற்றும் புலம்பெயர்வாழ் தமிழ் உறவுகளையும் முழுமையாக
பயன்படுத்தி, வடக்கின் வறுமை நிலையை கட்டுப்படுத்த முடியும். இதுதவிர,
அடுத்தகட்ட தெரிவு இன்றி வீதிகளில் நிற்கும் இளைஞர், யுவதிகளால் இன்று
வடக்கில் அதிகரித்துள்ள வாள்வெட்டுக்கள், போதைவஸ்து பாவனை, கலாசார சீரழிவுகள்
என்பவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்து முயற்சியாளர்களையும்,
உற்பத்தியாளர்களையும், தொழில் வல்லுனர்களையும் உருவாக்க முடியும்.

இது
எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமான தொழில்படையையும், சமூகத்தையும் பெற
வழிவகுக்கும்.

தற்போதைய சூழலில் சர்வதேச தொழில் நிபுணத்துவம் கொண்ட வல்லுனர்களை உருவாக்க
வேண்டிய தேவை இருக்கின்றது.

நாடு அபிவிருத்தி நோக்கி முன்னேறி வருகின்றது.
வெளிநாட்டு முதலீடுகளையும், உற்பத்திகளையும் நாடு பூராகவும் அதிகரிப்பதற்கு
அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு முறையான
தொழிலாளர் பற்றாக்குறை என்பது தற்போதும் இருந்து வருகின்றது.

மறுபுறம்
பட்டதாரி ஆகிய பலர் வேலைவாய்ப்பைக் கோரி வீதியில் இறங்கி போராட
வேண்டியிருக்கின்றது.

இந்த நிலையில் தேவையானதும், அவசியமானதும் ஆன தொழில் துறைக்கான கற்கைகள் நோக்கி
கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் மற்றும் மாகாண அரசு ஒரு
கொள்கை வகுத்து, இததகைய தொழில்சார் கற்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க
முன்வரவேண்டும்.

பாடசாலை கல்வித் திட்டத்திலும் இது தொடர்பில் கவனம் செலுத்தி
மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அத்துடன் நின்றுவிடாது இது தொடர்பில் சமூக
மட்டத்திலும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம்
ஆரோக்கியமான நிபுணத்துவம் கொண்ட முயற்சியாளர்களையும், தொழில்படையையும்
வடக்கிலும் உருவாக்க முடியும்.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு,
28 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–


இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.