தென் கொரியாவால் (South Korea) E-8 விசா பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பருவகால தொழிலாளர் திட்டத்தை இலங்கையில் ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்த அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தென் கொரிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, தங்கள் நாட்டில் விவசாயம் மற்றும் கடற்தொழில் துறைகளில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக E-8 விசா பிரிவின் கீழ் பருவகால தொழிலாளர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிகபட்சமாக 3 ஆண்டுகள்
இதன் மூலம், தென் கொரியாவின் மாகாண சபை நிறுவனங்கள் குறுகிய காலத்திற்கு வெளிநாட்டு தொழிலாளர்களை சட்ட பூர்வமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் இலங்கை தொழிலாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த தென் கொரியாவின் மாகாண மற்றும் நகராட்சி மன்றங்கள் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளன.
அந்த வகையில், முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் முன்வைத்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
முன்மொழியப்பட்ட முன்னோடித் திட்டத்தின் கீழ், இலங்கைத் தொழிலாளர்கள் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்குள் மூன்று (3) பதவிக்காலங்கள் வரை பணியாற்றத் தகுதி பெறுவார்கள்.