கொழும்பு மற்றும் அயற்பிரதேசங்களில் நீண்டகாலமாக முச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளது.
குறித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் முச்சக்கர வண்டிகளைத் திருடி விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் போதைப் பொருள் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ் வீதி பகுதியில் கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பிரிவினரால் அண்மையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 9 முச்சக்கரவண்டிகளும், அதனை வைத்திருந்த மேலும் நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் 31, 38, 51 மற்றும் 54 வயதுடைய சீதுவ, ஒருகொடவத்த, கொழும்பு 10 மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட முச்சக்கரவண்டிகள் கோட்டை, கிரிபத்கொடை, வத்தளை மற்றும் பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திருடப்பட்டமையும் விசாரணையின் போது வௌியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.