பொலன்னறுவை (Polonnaruwa) – வெலிகந்தை பிரதேச பாடசாலை ஒன்றில் அத்தன
என்ற மூலிகை செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவமானது, நேற்று முன்தினம் (05.07.2024) இடம்பெற்றுள்ளதாக வெலிகந்தை
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகந்த – அசேலபுரத்தில் சித்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகை செடியான அத்தன செடியின் பழ விதைகளை உட்கொண்டால் போதை ஏற்படும் என
முதியவர் ஒருவர் உட்கொண்டு வந்துள்ளார்.
பாடசாலை சிறுவன்
இதனை அவதானித்த பாடசாலை சிறுவன் ஒருவன் அந்த
விதைகளை உட்கொண்டபோது அவனுக்கும் போதை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த பாடசாலை சிறுவன் தான் கல்வி கற்கும் அசேலபுரத்தில் உள்ள
பாடசாலையின் சக மாணவர்களுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அவர்கள் இந்த
விதையை எடுத்துக் கொண்டு வருமாறு அந்த மாணவனிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ தினமான வெள்ளிக்கிழமை குறித்த விதைகளை பாடசாலைக்கு எடுத்துச்
சென்ற மாணவன் சக மாணவர்களுக்கு வழங்கியுள்ளான்.
இந்நிலையில், அவர்கள் அதனை
உட்கொண்ட 4 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகள் உட்பட 7 மாணவர்கள்
மயக்கமடைந்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதனை தொடர்ந்து, அவர்களை உடனடியாக அம்புலனஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட
விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து
வெளியேறியுள்ளதுடன் ஒரு மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு எந்தவிதமான ஆபத்துக்களும் இல்லை என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.