Courtesy: Sivaa Mayuri
பவர் கிரீட் எனப்படும் மின்சார இணைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு இலங்கையும் இந்தியாவும் (India) கூட்டு முயற்சி ஒன்றை மேற்கொள்ள தயாராகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, இலங்கை மற்றும் இந்தியா இரண்டு நாடுகளும் கடலுக்கடியில் மின்சாரம் வழங்கும் பாதையை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது, இலங்கையின் அனுராதபுரத்தையும் (Anuradhapura), இந்தியாவின் தமிழ்நாட்டின் (Tamil Nadu) தலைநகரான சென்னையையும் நேரடி மின்பாதை மூலம் இணைக்கும்.
கடலுக்கடியில் பாதை
அதேவேளை, இந்தியாவில் 130 கிலோமீற்றர் நிலப்பரப்பு பாதைக்கு அப்பால் இலங்கையின் வடக்கு – கிழக்கு, குறிப்பாக மன்னார் – திருக்கேதீஸ்வரத்துக்கு கடலுக்கடியில் ஒரு பாதை (நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்) வழியாக இந்த இணைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
விரிவான திட்ட அறிக்கையை தொடர்ந்து, இரு தரப்பும் இப்போது வணிக மாதிரியின் படி திட்டத்தை செயற்படுத்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
மேலும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படவுள்ள காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத்தை மையப்படுத்தியே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்த மின்சார இணைப்புத் திட்டம் அமைகிறது என தெரிவிக்கப்படுகின்றது.