Courtesy: Sivaa Mayuri
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகின்ற நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை (Donald Trump) விட கூடுதல் வாக்குகளை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் ( Kamala Harris) பெறுவார் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது கமலா ஹாரிஸ் பின்தங்கியிருந்த நிலையில், படிப்படியாக ஆதரவு அதிகரித்துள்ளதாக கணிப்புக்கள் கூறுகின்றன.
டிரம்புக்கு ஆதரவாக 45 சதவீத வாக்காளர்கள்
இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியும் இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், போட்டியிலிருந்து ஜூலை 21ஆம் திகதியன்யறு விலகிக்கொண்டார்.
இதனையடுத்தே துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, டொனால்ட் ட்ரம்பைக் காட்டிலும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தார்.
இதன்படி 2024 ஜூலை 21ஆம் திகதி, டிரம்புக்கு ஆதரவாக 45 சதவீத வாக்காளர்களும், ஹாரிஸுக்கு ஆதரவாக 43 சதவீதம் பேரும் இருந்தனர்.
ஜனாதிபதியை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு
எனினும் அது ஜூலை 31ஆம் திகதி 44 சதவீதம், 43 சதவீதம் என அளவில் மாற்றம் அடைந்தது.
இந்தநிலையில் கடந்த முதலாம் திகதி நிலவரப்படி கமலா ஹாரிஸுக்கு 48 சதவீதம் பேரும், டொனால்ட் டிரம்புக்கு 47 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட மாகாணங்கள், குறிப்பிட்ட கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கும் நிலை தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருகிறது.
எனினும் 7 மாகாணங்களில் மட்டும் மக்கள் மாறி மாறி வாக்களிப்பார்கள்.
எனவே இந்த மாகாணங்களே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அரிசோனா, ஜோர்ஜியா, வடக்கு கரோலினா மாகாணங்களில் டிரம்புக்கு 49 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் மிச்சிகன், விஸ்கான்சின் மாகாணங்களில் ஹாரிஸுக்கு 49 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளனர்.
நெவேடா, பெல்சில்வேனியா மாகாணங்களில் இருவருக்கும் 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.