Courtesy: H A Roshan
இந்திய தூதரகத்தினால் இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் திருகோணமலையில் உள்ள 21 ஆழ்கடல் கடற்றொழில் சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்றொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் ரவிக்குமார் தலைமையில் நேற்று(03.11.2024) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை திருக்கடலூர் கடற்றொழிலாளர்கள் வர்த்தக சங்க கட்டடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு
பிரதம அதிதியாக இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா(santosh-jha) கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.
குளிர்சாதன பெட்டி
இதன்போது 40 HP படகு என்ஜின் ஒன்றும், குளிர்சாதன பெட்டிகள் மூன்றும் ஆழ்கடல் கடற்றொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் திருகோணமலையைச் சேர்ந்த 21 கடற்றொழில் சங்கங்கள் நன்மையடையுள்ளார்கள் என்று சங்கத்தினர் தலைவர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதன்போது இந்திய உயரிஸ்தானிகர் கருத்து தெரிவிக்கையில், “வரலாற்று ரீதியாக இலங்கையின் கடற்றொழில் சமூகத்தின் தாயகமாக சிறந்து விளங்கும் திருகோணமலை நகரத்தில் கடற்றொழில் நடவடிக்கை என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறையாகும்.
இது பழங்கால பாரம்பரியமாக செய்துவரும் இத்தொழில் மூலம் பல்லாயிரம் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்குகிறது.
இப்பகுதி மக்களுக்கு உணவு, வருமானம் மற்றும் தேவைகளுக்கான நம்பிக்கையை கடல் அன்னை வழங்கியுள்ளது.
இலங்கை – இந்தியா
இலங்கைக்கு இந்தியா வழங்கிய பெரிய அபிவிருத்தி ஒத்துழைப்பு உதவிகளின் வரிசையில், இந்த நாட்டின் கடற்றொழில் சமூகத்தை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும், மேம்படுத்துவதற்குமான எமது முயற்சி முக்கிய இடத்தில் உள்ளது.
2009ஆம் ஆண்டு உள்நாட்டு நிறைவடையந்த ஆயுத மோதலை அடுத்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த கடற்றொழிலாளர்கள் உள்ளிட்டவர்ளுக்கு கடந்த காலங்களில் உபகரணங்களை வழங்கிய பல நிகழ்வுகளும் இதில் அடங்கும்.
கிழக்கு மாகாணத்தின் பல்துறைசார் மானிய உதவிகளுக்கென சுமார் 2.35 பில்லியன் இலங்கை ரூபாய்களை ஒதுக்க இந்தியா உறுதியளித்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான 33 திட்டங்களுக்கான, கட்டமைப்பு திட்டங்கள் இறுதி செய்யப்பட உள்ளன.
இவற்றில், 7 கடற்றொழில் திட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல், நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு, கடற்பாசி கூண்டு வளர்ப்பு, திலாப்பியா குளத்து மீன் வளர்ப்பு மற்றும் பருவகால தொட்டி மேம்பாடு போன்ற கருப்பொருள்கள் உள்ளடங்கியுள்ளன” என்றார்.