உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் (Puri Jagannath) கோவிலின் பொக்கிச அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், ரத்னா பந்தர் (Ratna Bhandar) என்னும் குறித்த பொக்கிச அறை நேற்று (14) திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா (India) – ஒடிசா மாநிலம் (Odisha) பூரியில் (Puri) 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு பல்வேறு கால கட்டங்களில் அங்கு ஆட்சி செய்த மன்னர்கள் தங்கம், வைரம், வைடூரியம் என விலை மதிப்பில்லா நகைகளை காணிக்கையாக அளித்துள்ளனர்.
சுரங்க அறை
இந்த நகைகள் அனைத்தும் ஜெகன்நாதர் கோவிலின் தரைப்பகுதிக்கு கீழே சுரங்க அறை ஏற்படுத்தி அதற்குள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த அறை கடைசியாக 1978 இல் திறக்கப்பட்டபோது அதை அருகில் இருந்து பார்த்தவர்கள் நகைகள் அனைத்தும் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் அறைகள் தரைக்கு கீழேயும் கடல் பகுதியை ஒட்டியும் இருந்ததாகவும் கூறியுள்ளனர்
எனவே பொக்கிச அறை குறித்து ஆராய 1984 இல் தொல்லியல் துறை குழு அய்வு செய்ய சென்ற போது, பொக்கிச அறையின் நிலமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் பாம்புகள் உள்ளே இருப்பதாகவும் கூறி ஆய்வுக்குழு திரும்பி வந்து விட்டது.
பொக்கிச அறை
குறிப்பாக 2018 ஆம் ஆண்டில் பொக்கிச அறையின் சாவி காணாமல் போனதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில் தான் 46 ஆண்டுகளுக்கு பிறகு தொல்லியல் துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் முன்னிலையில் நேற்று பொக்கிச அறை திறக்கப்பட்டு அதில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு பணிகள் மிகவும் இரகசியமாக நடைபெற்று வருவதால் பணிகள் முடிய சுமார் 70 நாட்கள் வரை ஆகலாம் என அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.