அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் நடந்ததாகக் கூறப்படும் தகாத செயலில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் மருத்துவரின் தனியுரிமையை அனைத்து அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களும் மதிக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
இன்று (11) ஒரு அறிக்கையில், ஊடகங்கள் அவரது அடையாளத்தை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பாதிக்கப்பட்டவரின் தனியுரிமை
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் செய்தி அறிக்கையிடப்படும் போது சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் இரவு நடந்த இந்த சம்பவம் நாடு தழுவிய அடிப்படையில் மக்கள் மத்தியில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
இராணுவத்திலிருந்து தப்பியோடிய சந்தேக நபர், மருத்துவரை அவரது பணி அறைக்குள் கத்தியைக் காட்டி மிரட்டிய பின்னர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
அவரைக் கண்டுபிடிக்க ஐந்து பொலிஸ் குழுக்கள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு, விரைவான நீதி கோரி மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்டவருக்கு நீதியை உறுதி செய்ய வேண்டுமென கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.