அனைத்துப் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு தினசரி உடல் தகுதித் திட்டங்களை
அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தலைமையில்
விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பில் இந்த முடிவு குறித்து
கலந்துரையாடப்பட்டதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு
இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளர்களுக்கான வெற்றிடங்கள்
விளையாட்டு அமைச்சுக்கு கல்வி அமைச்சுக்கும் இடையில் கூட்டுக் குழுவை
நிறுவுவதற்கும் கூட்டத்தில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டதாக பிரதி அமைச்சர்
செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை விளையாட்டு சங்கங்கள் மற்றும் தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு இடையே
இந்தக் குழு ஒருங்கிணைந்து செயல்படும், பயிற்சியாளர்களுக்கான வெற்றிடங்களை
நிவர்த்தி செய்யும் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுகளில் தொடர்ச்சியை
உறுதி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.