சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) மற்றும், மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை அழைத்து வர விண்ணில் ஏவப்பட இருந்த ரொக்கெட் விண்ணில் ஏவப்படாமல், கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஃபால்கன் 9 ரொக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விண்ணில் ஏவப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) மற்றொரு வீரரான புட்ச் வில்மோர்(Butch-wilmore) கடந்த ஜூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில் ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர்.
அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 16ஆம் திகதி பூமிக்கு திரும்பவுள்ளதாக நாசா அறிவித்திருந்தது.
தொழில்நுட்பக் கோளாறு
இந்நிலையில், ரொக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ரொக்கெட்டை விண்ணில் செலுத்தும் இன்றைய திட்டம் தாமதமாகி உள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் க்ரூ 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இந்திய நேரப்படி நாளை(14) அதிகாலை 4.56 மணிக்கு ரொக்கெட்டை விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளதாக நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசா விண்வெளி வீரர்களான ஆனி மெக்லைன், நிகோல் ஏயர்ஸ், ஜப்பான் விண்வெளி துறையை சேர்ந்த தகுயா ஒனிஷி மற்றும் ரோஸ்கோமோஸ் விண்வெளி வீரர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேறி விட்டனர்.
இன்றைய திட்டப்படி ஸ்பேக்ஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்வெளிக்கு புறப்பட்டு இருந்தால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மார்ச் 19ஆம் திகதி பூமிக்கு திரும்பியிருப்பர்.
தற்போது இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இருவரும் பூமிக்கு திரும்புவது மேலும் தாமதமாகி உள்ளது.