வடமத்திய மாகாணத்தில்(north central province) நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் தற்போது வெளியாகி உள்ளதாக அநுராதபுரம்(anuradhapura) மாவட்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை (2ம் திகதி) முதல் புதிய பாடசாலை தவணை ஆரம்பமான பின்னர் மூன்றாம் தவணை பரீட்சை இடம்பெறும் என அநுராதபுரம் மாவட்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் அசேல விஜேசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
வாட்ஸ்அப் குழுக்களில் பரிமாறப்படும் வினாத்தாள்கள், விடைத்தாள்கள்
தற்போதும் ஆறாம் வகுப்பின் புவியியல் உள்ளிட்ட வினாத்தாள்கள், விடைத்தாள்கள் வாட்ஸ்அப் குழுக்களில் பரிமாறப்படுகின்றன.
வடமத்திய மாகாணத்தில் பருவப் பரீட்சைகள் தொடர்பில் மிகவும் பரிதாபகரமான நிலைமை காணப்படுவதாகக் குறிப்பிடும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர், அங்கு தொடர்ச்சியாக வினளாத்தாள்கள் கசிந்தவண்ணமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டவிரோத செயற்பாடுகளினால் பரீட்சையின் இரகசியத்தன்மை, பரீட்சையின் தரம், மாகாண சபையினால் ஏற்படும் அதிக செலவு போன்றவை மாகாணத்தில் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்கறை செலுத்தாத அதிகாரிகள்
ஏனைய மாகாணங்களில் இருந்து வினாத்தாள்களை இந்த மாகாணத்திற்கு கொண்டு வந்து அச்சடித்து மாகாண கல்வி அதிகாரிகளால் வழங்கப்படுவது போன்ற பாரதூரமான சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகாரிகளுக்கு தெளிவாக சுட்டிக்காட்டப்பட்ட விடயம் எனவும் அசேல விஜேசிங்க மேலும் வலியுறுத்தினார்.
ஆனால் அதிகாரிகள் இது தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை எனவும் இதனால் மாகாணத்தில் தொடர் பரீட்சைகள் இடம்பெறும் நிலை துக்ககரமானது எனவும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இந்த பாரிய நெருக்கடிக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகளே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் அதிகாரிகள் உடனடியாக இது தொடர்பில் உரிய தீர்வை வழங்கி உடனடி விசாரணை நடத்த வேண்டும் எனவும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.