அமெரிக்காவில் கல்வி திணைக்களத்தை மூடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உத்தரவில்,
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று கையெழுத்திட்டுள்ளார்.
இது அமெரிக்க வலதுசாரிகளின் பல தசாப்த கால இலக்காகும் என்பதோடு இது, கூட்டாட்சி அரசாங்கத்தின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு, மாநிலங்கள்,
தனித்து பாடசாலைகளை நடத்த வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கையாகும்.
காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல்
இந்த உத்தரவு, கூட்டாட்சி கல்வித் திணைக்களத்தை மூடும் என்று ட்ரம்ப்
கூறியுள்ளார்.
நாங்கள் அதை விரைவில் மூடப் போகிறோம். அது எங்களுக்கு எந்த
நன்மையும் செய்யாது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
கல்வியை அது சேர்ந்த
மாநிலங்களுக்கே திருப்பித் தருவோம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1979 இல் உருவாக்கப்பட்ட கல்வித் திணைக்களத்தை காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல்
மூட முடியாது என்ற போதும், ட்ரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
பேரழிவு தரும் நடவடிக்கை
இந்த நிலையில், தொழில்நுட்ப அதிபர் எலோன் மஸ்க் மற்றும் அவரது அரசாங்க
செயல்திறன் துறை (DOGE) உதவியுடன் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் மிருகத்தனமான
மாற்றங்களில், இந்த நடவடிக்கை மிகவும் கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று ஜனநாயகக் கட்சியினரும் கல்வியாளர்களும் இந்த நடவடிக்கையை கடுமையாக
விமர்சித்துள்ளனர்.
செனட்டில் உள்ள உயர்மட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சக் ஷுமர், இதை
“கொடுங்கோன்மை அதிகாரப் பறிப்பு” என்றும், “டொனால்ட் ட்ரம்ப் இதுவரை எடுத்த
மிகவும் அழிவுகரமான மற்றும் பேரழிவு தரும் நடவடிக்கைகளில் ஒன்று” என்றும்
கூறியுள்ளார்.
எனினும்,ஐரோப்பா மற்றும் சீனாவை விட அமெரிக்காவில் பணத்தை மிச்சப்படுத்தவும்
கல்வித் தரத்தை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியம் என்று ட்ரம்ப்
கூறியுள்ளார்.