முல்லைத்தீவில் இருந்துகொண்டு வெளிநாட்டில் அகதிகள் தஞ்சம் கோரிய மூவருக்கு
போலியான பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவு விசாரணைக்கு அழைத்தது போல்
கடிதம் அச்சிட்டு அனுப்பிவைத்த நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸார் நேற்றையதினம்(18.12.2024) குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
லண்டனில் இருக்கும் நபர்கள் அகதிகள் உரிமை கோரி அதற்கு இலங்கையில்
வாழமுடியாததற்கான காரணம் என்ன என்பதை இங்கிருந்து போலியான முறையில் பயங்கரவாத
குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளதான கடிதத்தினை
வடிவமைத்து அதற்கு அச்சு அசலாக இறப்பர் முத்திரையும் குத்தி ஒரு கடிதத்திற்கு இரண்டரை
இலட்சம் ரூபா பணம் பெற்று குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போலியான கடிதம்
இது தொடர்பில் லண்டனில் உள்ள அகதிகள் தஞ்சம் கோரிக்கையாளர்களிடம் விசாரணையினை மேற்கொண்ட
அந்நாட்டு அதிகாரிகளின் ஊடாக முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல்
வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
தலைமையிலான குழுவினர்கள் செல்வபுரம், முல்லைத்தீவு என்ற முகவரியினை சேர்ந்த 28
மற்றும் 33 அகவையுடை இருவரை கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர்கள் அவ்வாறு போலியான கடிதம்
தயாரித்து விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதிவரை
விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.