‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து மற்றொரு விமானம் இன்று (09) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான C-17 ஆகும்.
அபுதாபியிலிருந்து வந்த இந்த விமானம், நாட்டிற்கு 27 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களை எடுத்துச் வந்துள்ளதாகவும், இந்த உணவுப் தொகுதியில் 8 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 14 நாட்களுக்குப் போதுமான உணவு அடங்கிய 1,080 பொதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம்
உதவிப் பொருட்களை ஏற்றி வந்த விமானம் நாட்டை வந்தடைந்ததும், இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தூதர் ரஷீத் அலி மசூரி உட்பட தூதரக அதிகாரிகள் குழுவும், இலங்கை வெளியுறவு அமைச்சகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் அதிகாரிகள் குழுவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதனை வரவேற்றுள்ளனர்.

இதற்கிடையில், இந்தியாவில் இருந்து உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மற்றொரு விமானம் இன்று (09) பிற்பகல் 1.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த விமானம் 61 மெட்ரிக் தொன் எடையும், 110 அடி நீளமும் கொண்ட பெய்லி இரும்புப் பாலத்தையும், 600 கிலோகிராம் எடையுள்ள மருந்துப் பொருட்களையும் நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




