Courtesy: Sivaa Mayuri
அமெரிக்காவின் (US) குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் (Kamala Harris) இடையேயான வாதவிவாதங்கள் நிறைந்த ஜனாதிபதிப் போட்டியின் தீர்மானம், இன்று மக்களின் கைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் அமெரிக்க வாக்காளர்கள் இன்று தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பில்லியன் கணக்கான டொலர்கள் செலவு மற்றும் பல மாதங்களாக நீடித்த தீவிர பிரசாரத்திற்கு மத்தியிலேயே இன்றைய தேர்தல் நடைபெற்று வருகின்றது.
வாக்களிப்பு நடவடிக்கைகள்
இந்த தேர்தலில் 60 வயதான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான அவர், ஜனாதிபதி பதவியை வெல்லும் முதல் பெண்ணாகவும், கறுப்பின பெண்ணாகவும், தெற்காசிய அமெரிக்கராகவும் வரலாற்றில் இடம்பிடிப்பார்.
குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முதல் முன்னாள் ஜனாதிபதியான 78 வயதான ட்ரம்ப், இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், அவர், ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலப்பகுதியில், தொடர்ச்சியாக வெற்றிபெறாத முதல் ஜனாதிபதியாக வரலாற்றில் பெயர் பெறுவார்.
இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாட்களில் நடந்த கருத்துக் கணிப்புகள், அரிசோனா, ஜோர்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய ஏழு மாநிலங்களில், இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையில் நெருக்கமான போட்டி நிலவுவதாக காட்டுகின்றன.
கருத்துக்கணிப்புகள், குறிப்பிடத்தக்க பாலின இடைவெளியையும் காட்டுகின்றன. பெண்களிடையே ஹாரிஸ் 12 சதவீத புள்ளிகளால் முன்னிலையிலும், ட்ரம்ப் ஆண்கள் மத்தியில் 7 சதவீத புள்ளிகளால் முன்னிலையிலும் உள்ளனர்.
புளோரிடா பல்கலைக்கழக தேர்தல் ஆய்வகத்தின்படி, மொத்தமுள்ள 240 மில்லியன் வாக்காளர்களில், 80 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் இன்று செவ்வாய்கிழமைக்கு முன்பே அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ வாக்களித்துள்ளனர்.