பண்டிகைக் காலங்களை இலக்காகக் கொண்டு குறுஞ்செய்தி (SMS) மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட குறித்த குழு, பல்வேறு வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் அனுப்பப்படும் போலிச் செய்திகள் குறித்து பொதுமக்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
நிதி மோசடி
இந்த குழுவின் கூற்றுப்படி, “குறித்த மோசடிகள் நன்கொடைகள், பணப் பரிசுகள், அதிர்ஷ்டக் குலுக்கல்கள் மற்றும் வேலைக் காப்பீடு போன்றவற்றில் சட்டபூர்வமான நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி ஈடுபடுகின்றன.
இந்நிலையில், சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்கள், சமூக ஊடக தளங்கள், குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மூலம் தனிநபர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனர்.
பாவனையாளர்கள் செய்தியில் வழங்கப்பட்ட இந்த இணைப்புகளை அணுகுவதன் மூலம், அவர்கள் கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளில் இருந்து தரவுகளை திருடலாம், இது பல்வேறு வகையான நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கும்” என்று எச்சரித்துள்ளது.
மேலும் அண்மைக் காலங்களில் குறிப்பாக தேசிய மற்றும் மத விழாக்களை மையமாக வைத்து இவ்வாறான மோசடிகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.