சிறுவர்கள் மற்றும் பெண்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேஸ்புக் மூலம் அடையாளம் காணும் நபர்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வேண்டுக்கோளை மிரிஹான பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரியும் தலைமை பொலிஸ் ஆய்வாளருமான வாருணி கேஷலா போகாவத்த விடுத்துள்ளார்.
பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட ஆண்கள் பல பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளம் பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து, அவற்றை இணையத்தில் வெளியிடவுள்ளதாக மிரட்டி பணம் பறிப்பதாக தெரிய வந்துள்ளது.
பெண்கள் முறைப்பாடு
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் முறைப்பாடுகளை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை விசாரித்த பின்னர் கப்பம் கோரிய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் புறக்கோடை பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் பொலிஸ் ஆய்வாளர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒன்லைன் குற்றவாளி
“பெண்கள் பேஸ்புக்கில் சந்திக்கும் ஆண்கள் குறித்து குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களிடம் அந்தரங்க புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைக் கேட்டால், அவற்றை ஒருபோதும் அனுப்ப வேண்டாம்.
நீங்கள் அறியாமலேயே சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். இதுபோன்ற சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பல பெண்கள், மற்றும் சிறுவர்கள் மிரிஹான சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகிறார்கள். ஒன்லைன் குற்றவாளிகளுக்கு பலியாகாதீர்கள்” என வாருணி கேஷலா மேலும் தெரிவித்துள்ளார்.