துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மிதிகம லசா எனப்படும் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர தனிநபர்களை ஏமாற்றியதற்காக, சிறைத்தண்டனை பெற்ற நபர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, போதைப்பொருள் வர்த்தக உலகின் பெரும் புள்ளி, கொலை, கொள்ளை மற்றும் கப்பம் பெறுதல் என்று பல்வேறு கடும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தகவின் நெருங்கிய தோழர் மிதிகம லசா என்பதும் தெரியவந்துள்ளது.
இவர் ஹரக் கட்டாவுடன் இணைந்து பல்வேறு பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கின்றார்.
ஹரக் கட்டா தலைமறைவாக டுபாயில் இருந்த போது, இலங்கையில் ஹரக்கட்டாவின் ஒப்பந்தக் குற்றங்களைச் செய்த பிரதான குற்றவாளியாக மிதிகம லசா இருந்துள்ளார்.
இந்நிலையில்,2018ஆம் ஆண்டு ஐக்கிய தேசிக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு மிதிகம பிரதேச சபைக்கு இவர் தெரிவு செய்யப்பட்டு பிரதேச சபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த முடிவுக்கு பலர் எதிர்ப்பு வெளியிட்டது மாத்திரம் அல்லாமல் சபையின் ஆரம்ப நடவடிக்கையிலேயே கடும் கூச்சல் குழப்பம் நிலவுகின்றது.
லசந்த விக்ரமசேகரவை பிரதேச சபையினுடைய தலைவராக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

