யாழ்ப்பாண கலாசார மையத்தின் (Jaffna Cultural Centre) பெயர் மாற்றம் செய்யப்பட்டமையானது மிகுந்த வருத்தமளிப்பதாக முன்னாள் வடக்கு மாகண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் (Vinthan Kanagaratnam) தெரிவித்தார்.
யாழ் (Jaffna) ஊடக அமையத்தில் இன்று (22.01.2025) இடம்பெற்ற ஊடக
சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”யாழ் கலாசார மையமானது ஈ.பி.டி.பி (EPDP) யாழ் மாநகரை ஆட்சி செய்த காலப்பகுதியில் தமிழ் மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கும் ஒரு குறியீடாக இந்திய (India) அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது.
இந்திய அரசின் செயற்பாடு
அன்று யாழ் மாநகர சபையை ஆட்சி செய்த ஈ.பி.டி.பியினர் பிரேரணையாக கொண்டுவந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) சார்பில் எதிர்க்கட்சியாக இருந்தும் கூட அந்த முயற்சி எமது மக்களின் கலாசாரத்தை கொண்டதாக இருந்தமையால் அதனை முழுமையாக ஆதரித்து வரவேற்றிருந்தோம். ஆனால் இன்று அதன் பெயர் மாற்றப்பட்டுள்ளது வருத்தமளிக்கின்றது.
இது தமிழ் மக்களின் கலாசாரத்தை சுமந்து நிற்கும் ஒரு வரலாற்றுக் கூடமாகும். இந்த பெயர் மாற்றம் இந்திய அரசின் செயற்பாடாகவோ அல்லது அரசின் செயற்பாடாகவோ இருந்தாலும் அதை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
இதைவிட அந்த நிகழ்வில் தமிழுக்கு கடை நிலை வழங்கப்பட்டமை திரை நீக்கம் செய்யும்போது தான் தனக்கு தெரியும் என அமைச்சர் ஒருவர் தெரிவித்தமை வேதனையான விடயம்.
அநுர அரசின் வாக்குறுதி
அத்துடன் கடந்த காலங்களில் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் ஜேவிபி செய்த செயற்பாடுகள்
அனைத்தையும் எமது மக்கள் நன்கு அறிவார்கள். அதேநேரம் அவர்கள் தமிழ் மக்களை ஒரு பொருட்டாக கண்டுகொள்ள விரும்புவதில்லை.
அவ்வாறான தரப்பினர் இன்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கிளீன் சிறிலங்கா என்று
கூறி தமிழ் மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்றதுடன் மறைமுக பழிவாங்கல் போக்குடனும் செயற்படுவதாக மக்கள் கூறுவதை காண முடிகின்றது.
ஆனால் ஆட்சியை கைப்பற்ற அநுர தரப்பு மக்களுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற
வேண்டும். இதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.” என தெரிவித்தார்.