தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு மாதங்களுக்கு அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் காரணமாக கணக்கெடுப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த பணி மேலும் தாமதமாகும் எனவும் மாவட்டச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் நலன்புரிப் பலன்கள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்னவிடம் மேற்கொண்ட விசாரணையில், தேர்தல் காரணமாக, கணக்கெடுப்புப் பணிகளை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கணக்கெடுப்பு பணி
இரண்டாம் கட்டத்துக்காக 455,697 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இரண்டாம் கட்டமாக, ஜூலை 31ம் திகதி தகவல் கணக்கெடுப்பு பணியை முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
அவற்றில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதேவேளை, பெரும்போகத்திற்கென விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியத்தை வழங்குவதற்கான ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவின் (anura kumara dissanayake) உத்தரவை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (vijitha herath) தெரிவித்துள்ளார்.