இலங்கையில், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகள் மற்றும் ஊசிகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சரும தோற்றத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் ஊசி வகைகளின் கட்டுப்பாடு இல்லாததால் ஆண்டுதோறும் பதிவாகும் தோல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் வைத்தியர் இந்திரா கஹாவிட்ட தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் ஒருவரின் தோற்றத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஊசி வகைகள் காரணமாக தோல் தொடர்பான நோயாளிகளில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வாரமும் தோல் வைத்தியசாலைகளில் இரண்டு முதல் மூன்று தொற்றுகள் பதிவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்று (15) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் பங்கேற்றபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பூர்வ உரிமை
ஊசிகள் மூலம் சருமத்தை வெண்மையாக்க இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும், அத்தகைய ஊசிகளுக்கு எந்த நாட்டிலும் பதிவு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வைட்டமின் ஊசிகள் அழகுசாதன நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தியாளர் சோதனைகளின் போது குறிப்பிடப்பட்டாலும், அத்தகைய உற்பத்தி நிறுவனங்கள் எதுவும் இல்லை என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
அழகுசாதனப் பொருட்கள் நாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட முறையில் கொண்டு வரப்பட்டால், அது ஒரு விலையுயர்ந்த விடயம் என்றும், அழகுசாதனப் பொருட்கள் சலூன்களில் உற்பத்தி செய்யப்பட்டால், அதற்கு ஒரு உற்பத்தி ஆலை இருக்க வேண்டும் என்றும், அது நல்ல உற்பத்தி நடைமுறைகளுக்கு உட்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் பாதுகாப்பானவை என்ற கருத்து இருந்தாலும், அவற்றில் பல பாதுகாப்பற்ற அழகுசாதனப் பொருட்களும் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சில சமயங்களில் தண்ணீர் மற்றும் சூரிய ஒளி கூட தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்றும் , நாட்டில் கிடைக்கும் கிரீம் வகைகளில் 40,000 முதல் 60,000 பாதரசம் இருப்பதாக கூறியுள்ளார்.
பாதரசம், ஸ்டீராய்டுகள், ப்ளீச்சிங் போன்றவை தேவையில்லாமல் உடலில் நுழைந்தால், அது நரம்பியல் நோய்கள், புற்றுநோய் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்றும் வைத்தியர் எச்சரித்துள்ளார்.