இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான நீண்டகால ஊழல் வழக்கு விசாரணையை ஜெருசலேம் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நெதன்யாகு மீதான குறித்த வழக்கை கைவிட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த சில மணிநேரங்களிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, இரகசிய இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேலிய பிரதமர் மற்றும் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால் இந்த ஒத்திவைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் பதிவு
பெஞ்சமின் நெதன்யாகு மீது கடந்த 2019ஆம் ஆண்டு இலஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அவற்றை அவர் மறுத்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வலதுசாரித் தலைவரை கவிழ்க்க திட்டமிட்ட இடதுசாரி வேட்டை என்று அவர் தனது மீதான விசாரணையை சாடியுள்ளார்.
சுமார் 06 வருடங்களாக தொடர்ந்து வரும் குறித்த வழக்கு, தற்போது இரகசிய இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நெதன்யாகு மீதான இந்த குற்றச்சாட்டுக்கு, டொனல்ட் ட்ரம்ப் மிகவும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றார்.
தனது நாட்டிற்காக இவ்வளவு செயற்பட்டுள்ள ஒரு மனிதனுக்கு இப்படி ஒரு சூனிய வேட்டை, எனக்கு நினைத்துப் பார்க்கவே முடியாதுள்ளது என ட்ரம்ப் அவரின் சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
நெதன்யாகுவின் விசாரணை உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் இவ்வாறானதொரு நீதியற்ற தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கடுமையாக தெரிவித்திருந்தார்.