திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, பகுதிகளில் வாழும்,
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்து கொள்வதற்காக, வெளி
விவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண்
ஹேமச்சந்திர களப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, புதிய அரசாங்கத்தால், குச்சவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு
வரும் முடிக்கப்பட்ட மற்றும் முடிக்கப்படாத அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக
பகுப்பாய்வு செய்து, மதிப்பீட்டு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.
முக்கிய நடவடிக்கைகள்
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால்,
வீட்டு புனர்நிர்மாண வேலைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட, ஒரு இலட்சம் ரூபாய்
பெறுமதியான காசோலைகளையும் பிரதி அமைச்சர் நான்கு பயனாளிகளுக்கு வழங்கி
வைத்தார்.

மேலும், மக்களின் குடியிருப்புகளுக்கு சென்று அவர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட பிரதி அமைச்சர், மாவட்ட அபிவிருத்தி
ஒருங்கிணைப்பு நிதியின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட நாவற்சோலை டவர் வீதியையும் பிரதி அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில், குச்சவெளி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்
மற்றும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களும் கலந்து
கொண்டுள்ளனர்.
குச்சவெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை
உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் வழங்கிய அர்ப்பணிப்பு மிக்க
சேவைக்கும், ஒத்துழைப்புக்கும் தனது நன்றிகளை இதன்போது பிரதி அமைச்சர்
தெரிவித்துக் கொண்டுள்ளார்.







