வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டமானது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (26.11.2024) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாண
மாவட்டங்களில் இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் நாளை (27.11.2024) நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
உயர்தரப் பரீட்சை
வடக்கு மாகாணத்தில் இதுவரை கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத்
தோற்றும் எந்தவொரு பரீட்சார்த்தியும் பாதிக்கப்படவில்லை எனவும்,
பரீட்சார்த்திகளுக்கு தேவையான வாகன வசதிகள் ஒவ்வொரு மாவட்டச் செயலகத்தாலும்
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
மேலும் வடக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளை மூடுவது தொடர்பான
தீர்மானங்களை வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு மாவட்டச்
செயலர்கள் மூலம் எடுக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.
இதேவேளை, இந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த மன்னார் மாவட்டச் செயலர்,
மழை காரணமாக 12, 629 குடும்பங்களைச் சேர்ந்த 43,910 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 1,547 பேர் 18
பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம் ஆகியனவற்றின்
எந்தவொரு வீதிகளும் இதுவரை தடைப்படவில்லை என திணைக்களப் பணிப்பாளர்கள்
தெரிவித்தனர்.
இடர்நிலைமை
பாதுகாப்பு நிலையங்களில் எந்தவொரு குடும்பங்களுக்கு தங்கவைக்கப்படவில்லை எனத்
தெரிவித்த மேலதிக மாவட்டச் செயலர், இன்று மாலை யாழ்ப்பாண பிரதேச செயலர்
பிரிவில் சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயரலாம் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை கடற்றொழிலாளர்களுக்கு உரிய முன்னெச்சரிக்கையை வழங்குமாறு வடக்கு மாகாண
பிரதம செயலர் அறிவுறுத்தினார்.
மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிக்கையில், நெடுந்தீவிலிருந்து பரீட்சை
விடைத்தாள்களை கொண்டு வருவதற்கும், வினாத்தாள்களை கொண்டு செல்வதற்கும் இப்போது
கடற்படையினரின் உதவியே பெறப்படுவதாகவும், கடலில் பயணிக்க முடியாத நிலைமை
ஏற்பட்டால் விமானப் படையினரின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், தமது ஆளுகைக்கு உட்பட்ட 54 குளங்களில் 25
குளங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளன, என்றார். இதேவேளை வடக்கு மாகாணத்தின்
பிரதான மூன்று குளங்களிலும் அதன் 50 சதவீத கொள்ளவை எட்டியுள்ளன என்றும் அவற்றை
எதிர்காலத்திலும் கிடைக்கப்பெறும் மழை வீழ்ச்சியை கருத்தில்கொண்டு இப்போதே
திறந்து விட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இடர்நிலைமை தொடர்பில் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு சகல
தரப்பினருக்கும் ஆளுநர் அறிவுறுத்தினார்.