திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல் தொந்தரவுக்கு
உட்படுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியதை அடுத்து,
கல்முனையின் மாரண்டமடு பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர், திருக்கோவில் பகுதியில் பல வாடகை வீடுகளில் தனது
மனைவியுடன் வசித்து வந்ததாக பொலிஸ்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் முன்னர் வசித்து வந்த பல
இடங்களுக்கு அதிகாரிகள் சென்றனர்.
வெளியான காணொளி
சந்தேக நபர் மற்றும் அவரது மனைவியின் தேசிய
அடையாள அட்டைகளின் நகல்களும் அத்தகைய ஒரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
அத்துடன் விசாரணைகளில், சந்தேக நபர் மூன்று நாட்களுக்கு முன்பு தனது வீட்டை
விட்டு வெளியேறிவிட்டதாக தெரியவந்தது.
இதனையடுத்தே இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர் தனது தலைமுடியை மொட்டையடித்து, கைது
செய்வதைத் தவிர்க்கும் முயற்சியில் தனது தோற்றத்தை மாற்றியிருந்தார்.

முன்னதாக குறித்த நபர் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் ஒரு வெளிநாட்டுப்
பெண்ணிடம் தன்னை அநாகரீகமாக வெளிப்படுத்துவதை காட்டும் காணொளி வெளியானது
அத்துடன், இந்த சம்பவத்தை எதிர்கொண்ட 24 வயதான நியூசிலாந்து சுற்றுலாப் பயணி
இலங்கை சுற்றுலா காவல் பிரிவில் மின்னஞ்சல் மூலம் அதிகாரப்பூர்வமாக
முறைப்பாட்டை செய்திருந்தார்.
செப்டம்பர் மாதம் இலங்கைக்கு வந்த அந்தப் பெண், அக்டோபர் 25 ஆம் திகதியன்று
அறுகம்குடாவிலிருந்து பாசிக்குடாவுக்கு முச்சக்கர வண்டியில் பயணித்துக்
கொண்டிருந்தபோது, திருக்கோவில் பகுதியில் சந்தேக நபரை சந்தித்ததாக
விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நேரத்தில்தான் சந்தேக நபர் இந்த அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

