எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வன்னி மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்டத்திற்கான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்புமனுவை நிராகரித்து மாவட்ட தேர்தல் அதிகாரியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி இந்த மனு உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி பரராஜசிங்கம் உதயராசா (Pararajasingham Udayarasa) மற்றும் இரண்டு வேட்பாளர்களினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் வன்னி மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்துள்ள நிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தனது வேட்பு மனுவை நிராகரித்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் அந்த முடிவை இரத்து செய்யுமாறும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வன்னி மாவட்ட பொதுத்தேர்தல் வாக்கெடுப்பை நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மற்றும் இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரையில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.