இலங்கையில் காசநோய் தொற்று மரணங்களுக்கு பிரதான காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இந்த தொற்றுநோய் தற்போது அதிகரித்துள்ளதுடன், காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய் தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பராமரிப்பு மாதிரியின் வினைத்திறனை அவதானிப்பதற்காக காலி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி
அதற்காக 387,280 அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு காசநோய் மற்றும் நுரையீரல் நோய் தொடர்பாகச் செயற்படும் சர்வதேச சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த ஆய்வை மேற்கொள்வதற்காக காசநோய் மற்றும் நுரையீரல் நோய் தொடர்பாகச் செயற்படும் சர்வதேச சங்கம், சுகாதார அமைச்சு மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக கல்வி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வழிகாட்டல்
இதேவேளை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்துடன், சுகாதார அமைச்சின் காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய் தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டமும் இணைந்து மேற்குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் 2021 ஆம் ஆண்டில் காசநோய் தடுப்பு சிகிச்சை தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்களுக்கு ஏற்ற வகையில் இலங்கைக்கும் வழிகாட்டல் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.