இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை 09 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இதே காலப்பகுதியில் கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு வருட முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் இன்று (21) ஜனாதிபதி ஊடக மையத்தில் (PMC) இடம்பெற்ற செய்தியாளர் சந்ப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டுச் சபை
இதன்போது, “இலங்கை முதலீட்டுச் சபை பதினைந்து முதலீட்டு வலயங்களுக்கான வசதிகளை வழங்குவதுடன் அந்த முதலீட்டு வலயங்களில் தற்போது 1575 நிறுவனங்கள் செயற்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இதில் 500,000 இற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
அரசாங்கத்தின் புதிய முதலீட்டுத் திட்டத்தின் கீழ், மாங்குளம், பரந்தன், காங்கேசன்துறை, திருகோணமலை, இரணைவில, ஹம்பாந்தோட்டை மற்றும் பிங்கிரிய உள்ளிட்ட பிரதேசங்களுக்கு ஏழு மேலதிக முதலீட்டு வலயங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான இலக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு ஒப்பந்தங்களைப் பெறுவதாக இருந்தாலும், கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் மூலம் முதல் ஆறு மாதங்களில் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளன.
கூட்டு முயற்சி
35 முதலீட்டு திட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. மேலும், கனேடிய-இலங்கை கூட்டு முயற்சியாக காங்கேசன்துறை முதலீட்டு வலயத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்காக இருபத்தேழு “ஏற்றுமதி ஊக்குவிப்பு” திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்றுமதி வருவாயை மேலும் அதிகரிக்க “இ-காமர்ஸ்” (E-Commerce) தளம் உருவாக்கப்படுகிறது” என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.