தற்போது ஆசியாவின் சில பகுதிகளில் பரவி வரும் இரண்டு புதிய ஓமிக்ரான் துணை
வகைகளான எல்எப்.7 மற்றும் என்பி.1.8 என்பன இலங்கையிலும் இருப்பதை, இலங்கையின்
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் வைரஸ் தொடர்பான நிபுணரும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்
மருத்துவ நிபுணருமாக ஜூட் ஜெயமஹா, இதனை அறிவித்துள்ளார்.
உயிரியல் மாதிரிகள்
இலங்கை முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட உயிரியல்
மாதிரிகளின் மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த துணை வகைகள் அடையாளம்
காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் தேவையற்ற எச்சரிக்கை அவசியமில்லை என்று ஜெயமஹா வலியுறுத்தியுள்ளார்.
கோவிட்-19 வைரஸின் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
என்றும், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மூலம் சுகாதாரத் துறை
விழிப்புடன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முகக்கவசங்கi அணிவது
மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது ஆகியவை அடங்கும் என்று அவர்
குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய முன்னேற்றத்தில், காலி தேசிய மருத்துவமனையில் அண்மையில் மரணமான,
ஒன்றரை மாதக் குழந்தை ஒன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது
கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து தொற்று
உறுதி செய்யப்பட்டது என்று மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த திரிபு தற்போது ஆசியாவில் பரவி வரும் புதிய துணை வகைகளில்
ஒன்றாக அடையாளம் காணப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

