இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்திய முதலீடுகளில் முக்கிய முதலீட்டுத் திட்டம் ஒன்றின் முதலீட்டாளர் இந்தியாவில் (India) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஆட்சிக்காலத்தில் கொழும்பு (Colombo) , கோட்டையின் மையப் பகுதியில் சதாம் வீதி அருகில் நான்கு ஏக்கர் மற்றும் ஒரு ரூட் காணி, இந்தியாவின் கிறிஷ் நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
கிறிஷ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அமித் கட்யால் முன்வைத்த விண்ணப்பத்தின் அடிப்படையில் குறித்த காணி, சர்ச்சைக்குரிய வகையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கொடுக்கல் வாங்கலின் போது நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa) பாரிய தொகையொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்போது தகவல்கள் பரவியிருந்தன.
மோசடி விசாரணை
குறித்த மோசடிகளை விசாரணை செய்ய நல்லாட்சிக் காலத்தில் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
எனினும் அதன் பணிப்பாளராக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார, குறித்த விசாரணைகளுக்கு இடையூறு செய்து கிறிஷ் நிறுவனத்தையும் நாமல் ராஜபக்ஷவையும் காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
அதன் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் அவர் கிறிஷ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கைது
இந்நிலையில் கிறிஷ் நிறுவனம், இந்திய செல்வந்தர்களை ஏமாற்றி அவர்களின் நிதி மூலம் இலங்கையில் மோசடியாக முதலீடுகளை மேற்கொண்டதாக தற்போது தகவல்கள் வௌியாகியுள்ளன.
சர்ச்சைக்குரிய வகையில் சேகரித்து 200 கோடி ரூபாய் சொத்துக்கள் தொடர்பில் இந்திய அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணைகளில் கிறிஷ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அமித் கட்யால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர் மீது பணச்சலவை, நிதிமோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் செயற்படும் கிறிஷ் டவர் செயற்திட்டமும் பணச்சலவை மூலம் மோசடியாக மேற்கொள்ளப்பட்ட முதலீட்டுத்திட்டங்களில் ஒன்றாக அமலாக்கத்துறையின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.