சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்றுவடிவிலான கிரிக்கெட்டிலும் தலைசிறந்த வீரராக பார்க்கப்படும் விராட் கோலி (Virat Kohli) ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள், அதிவேகமாக 12,000 ஓட்டங்கள் , டி20 கிரிக்கெட்டில் முதல்வீரராக 4000 ஓட்டங்கள் என பல்வேறு உலக சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் மேலும் ஒரு உலக சாதனையை பாகிஸ்தானுக்கு (Pakistan) எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் படைத்துள்ளார் கோலி.
வரலாற்று மைல்கல்
பாகிஸ்தானுக்கு எதிராக 15 ஒட்டங்கள் அடித்த விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்கள் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.
ODI கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்களை எட்டிய இரண்டு வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்ககரா இருவரும் இருந்தாலும், 300 இன்னிங்ஸுக்கு குறைவாக விளையாடி இந்த மைல்கல்லை எட்டிய ஒரே வீரராக விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.
சச்சின் மற்றும் சங்ககரா இருவரும் 350 மற்றும் 378 இன்னிங்ஸில் 14000 ஓட்டங்களை கடந்த நிலையில், 287 இன்னிங்ஸில் மட்டுமே விளையாடி இந்த இமாலய சாதனையை தன்பெயரில் எழுதியுள்ளார் கோலி.
அதுமட்டுமில்லாமல் பேட்டிங்கை கடந்து தன்னுடைய அபாரமான ஃபீல்டிங்கிலும் புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார் விராட் கோலி.