படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் கடந்த 10ஆம் திகதி ஹோமாகமை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில் கொலையுடன் தொடர்புடைய நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றிரவு (25) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் பைபாஸ் சாலையில் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
படுகொலை
விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சடலம் கொழும்பு-13 கொட்டாஞ்சேனை பிரதேச்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் சடலம் என்று கண்டறியப்பட்டது.

மேலும், படுகொலை செய்யப்பட்டவர் செலுத்தி வந்திருந்த வாகனம் மாவனல்லை அருகே றம்புக்கனை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அதனை எடுத்துச் சென்றிருந்த நபர் மாவனல்லையில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பிரகாரம் கொலையுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் நேற்றிரவு கொழும்பு மாதம்பிட்டி மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நான்கு பேரும் 18 தொடக்கம் 24 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

