எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு மக்களாகிய நாங்கள் எமது வாக்குரிமையை நமது உரிமையை பெற்றுக்கொள்ளும் பலமான வாக்குச்சீட்டாக பயன்படுத்த வேண்டும் என சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விடயத்தை சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை (sri lanka) நாட்டின் ஒவ்வொரு குடிமகனினதும் அடிப்படை உரிமை வாக்களிப்பு உரிமை ஆகும்.
வாக்குரிமை
இந்த வாக்கு உரிமைதான் ஜனநாயக ரீதியானது குறிப்பாக தமிழ் மக்கள் முப்பது வருட காலத்தில் ஆயுத போராட்டத்தில் போர் சூழலில் அகப்பட்டு பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாகினார்கள்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நிற்க வேண்டும்.
கடந்த காலங்களில் வாக்குரிமையை பயன்படுத்தாத காரணத்தினால் தமிழ் மக்கள் அதன் விளைவை எதிர்நோக்கி இருந்தார்கள்.
உங்கள் வாக்குரிமையை வீணடிக்காது உங்கள் உரிமையை பயன்படுத்தி உங்கள் உரிமைகளை தரக்கூடிய தகுந்த தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்களது கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
அதனை கவனமாகவும் புத்திசாதுரியமாகவும் பயன்படுத்தி ஜனநாயக ரீதியான தலைவரை தேர்வு செய்வதற்கு பார்த்துக் கொண்டிராமல் பங்காளிகளாக இருந்து உங்கள் எண்ணங்களை நிறைவேற்ற இந்த தேர்தல் வழியை பயன்படுத்துவது சிறந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.