இலங்கை(sri lanka) சுற்றுலா அதிகார சபையின் (SLTDA) தரவுகளின்படி, மார்ச் மாதத்தின் முதல் ஐந்து நாட்களுக்குள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 37,000ஐத் தாண்டியுள்ள அதேவேளை முதலிடத்தில் இருந்த இந்தியா(india) இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
மார்ச் 1 முதல் 5 வரையான நாட்களில் மொத்தம் 37,768 சர்வதேச சுற்றுலாதாரிகள் வந்துள்ளனர், இது ஆண்டுக்கான சுற்றுலாதாரிகளின் வருகையை 530,746 ஆகக் கொண்டு வந்துள்ளது.
குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டிய இலங்கை
2024 மார்ச் மாத நடுப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த மாதம் மார்ச் 1 ஆம் திகதி அரை மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எட்டியதன் மூலம் இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
மார்ச் மாதத்திற்கான தினசரி சராசரி 7,553 வருகைகள் என சுற்றுலா அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாவதாக முன்னேறிய ரஷ்யா
மார்ச் மாதத்தில் இலங்கையின் சுற்றுலாவின் மிகப்பெரிய மூல சந்தையாக ரஷ்ய கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது, இது மொத்த வருகையில் 15.3 சதவீதமாகும்.
இந்தியா 14.2 சதவீத பங்களிப்பை வழங்கி இரண்டாவது இடத்திற்கு சரிந்தது.
அதே நேரத்தில் ஐக்கிய இராச்சியம் மொத்த வருகையில் 10.2 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மற்ற முக்கிய சந்தைகளில் ஜேர்மன்(germany), பிரான்ஸ்(france), சீனா(china), அவுஸ்திரேலியா(australia) மற்றும் நெதர்லாந்து(netherland) ஆகிய நாடுகள் அடங்கும்.
இந்த மாத இறுதியில் இலங்கைக்கான புதிய விளம்பர முயற்சிகளை வெளியிட சுற்றுலா அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாதாரிகளை ஈர்த்து 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டுவதை இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.